வேலூர் புதிய பஸ்நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது
வேலூர் புதிய பஸ்நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது என்று ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று மாலை மாநகராட்சி உள்பட பல்வேறுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதலில் பஸ்கள் நிற்கும் பகுதி, பயணிகள் அமரும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர் அந்த இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பஸ்நிலையம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
பஸ்நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறைகளை 24 மணி நேரமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறையையொட்டிய சுற்றுச்சுவரில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சேராதபடி கண்காணிக்க வேண்டும். பஸ்நிலையத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும்.
ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது
கட்டிடங்களின் மேல்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி கட்டிடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. அந்த கட்டிடங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கட்டண கழிப்பறையில் இலவசமாக இயற்கை உபாதைகள் கழிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வறை உடனடியாக ஒதுக்க வேண்டும். பஸ்நிலையத்துக்குள் ஆங்காங்கே தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
பஸ்நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நுழைவதற்கு அனுமதிக்க கூடாது. நுழைவுவாயில்களில் போலீசார் சுழற்சி முறையில் நின்று வாகனங்கள் உள்ளே நுழையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நுழைந்தால் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
பஸ்நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஏ.டி.எம். மையம் வசதி
அரசு விரைவு பஸ்கள், வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள், காவல்துறையினருக்கு உடனடியாக அறைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பஸ்நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் இல்லை. எனவே பஸ்நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கணபதி, துணை மேலாளர் பொன்னுபாண்டி, வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், உதவிகமிஷனர் சுப்பையா, இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.