ரூ.280¾ கோடியில் இருவழித்தடமாக மாற்றம்


ரூ.280¾ கோடியில் இருவழித்தடமாக மாற்றம்
x

ராசிபுரத்தில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக மோகனூர் செல்லும் சாலை ரூ.280 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

நாமக்கல்

இருவழித்தடமாக தரம் உயர்வு

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.280 கோடியே 73 லட்சம் செலவில், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலை 31.50 கி.மீட்டர் நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி, சேந்தமங்கலம் பிரிவு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் சின்ராஜ் எம்.பி., பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட சாலையினை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவிகோட்ட பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

5 புறவழிச்சாலைகள்

இத்திட்டத்தில் 5 புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 53 குறு மற்றும் 3 சிறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இத்திட்டத்தில் முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய முக்கிய ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். நாமக்கல்லின் முக்கிய சுற்றுலா தளமான கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோவை நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story