நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் கைது
கல்குவாரி விபத்து தொடர்பாக திசையன்விளையை சேர்ந்த உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள். விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேந்திரனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். முன்னதாக நில அளவை துறை உதவி இயக்குனர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து நில அளவு குறித்து ஆய்வு செய்தனர். ராஜேந்திரன் ராட்சத பாறைகளுக்கு நடுவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட உள்ளனர். ஆனால் அடிக்கடி லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, கல்குவாரி விபத்து தொடர்பாக திசையன்விளையை சேர்ந்த உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மங்களூரில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.