சப்-இன்ஸ்பெக்டர் கணவர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கஞ்சா வழக்கில் கைதான பெண் சப்-இன்ஸ்பெக்டர் கணவர் உள்பட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தக்கலை,
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட்டில் சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த செட்டியார்விளையை சேர்ந்த செல்வின் (வயது47), கமலாபந்தி தெருவை சேர்ந்த மனோஜ் (31) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா, சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பளுதூக்கும் வீரரான செல்வின் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வேலை பார்த்து வந்த போது அங்கு பயிற்சிக்காக வந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. கலைசெல்வன் என்ற பெயரில் மும்பையில் வசித்து வரும் செல்வின் ஊருக்கு வரும்போதெல்லாம் அங்கிருந்து கஞ்சாவை தனது காரில் கடத்தி வந்து தனது நண்பர் மனோஜுடன் சேர்ந்து குமரி மாவட்டத்தில் பல இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் ெதரிய வந்தது.
இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா விற்பனை செய்ய செல்வினின் மனைவியான மும்பை பெண் சப்-இன்ஸ்பெக்டர் உதவினாரா? அல்லது அவருக்கு தெரியாமல் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.