காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகள் கடத்தலா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தைகள் மாயம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் ஏழுமலை குழந்தைகள் இருவரையும் பார்வையாளர் கூட்டத்தில் வைத்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஏழுமலையும், மூர்த்தியும் டீ குடிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பார்வையாளர் கூடத்தில் இருந்த சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.
போலீசார் விசாரணை
இது குறித்து ஏழுமலையும், மூர்த்தியும் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்க்க முற்பட்ட போது கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடற்று இருந்தது. குழந்தைகள் கடத்தி செல்லப்பட்டனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகப்பேறு நலப்பிரிவில் ஏற்கனவே பச்சிளம் குழந்தை கட்டை பையில் வைத்து கடத்தப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி பின்னர் போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது 2 குழந்தைகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.