சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்: ரெயில்வே போலீஸார் விசாரணை
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரெயிலில் சோதனை
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்வது வழக்கம். நேற்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 கோச்சில் ரெயில்வே போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தபோது அங்குள்ள கழிவறை பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர். அவர்கள் கையில் ஒரு கைப்பை இருந்தது. அதை போலீசார் வாங்கி சோதனை செய்தனர்.
ரூ.1 கோடி தங்க நகைகள் பறிமுதல்
அந்த பையில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நபர்களிடம் கேட்டபோது அவற்றை தாங்கள் கடைகளுக்கு வியாபாரம் செய்ய எடுத்து செல்வதாக கூறினர். பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். இதில் அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை என தெரிய வந்தது. பின்னர் அந்த நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் தங்க நகைகளை கொண்டு வந்தவர்கள் சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 44) மற்றும் ராம்லால் (44) என தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ரெயில்வே போலீசார் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.