மதுரை அருகே த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு


மதுரை அருகே த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுப்பு
x

கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

மதுரை,

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் நடிகர் விஜய் 22-ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டியும், கார் போன்ற வாகனங்களில் முன்னால் இருக்கும் கம்பியில் இணைத்தும் பறக்கவிட்டு வருகிறார்கள்.

இதேபோல், த.வெ.க நிர்வாகிகள் 234 தொகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியை பறக்கவிட்டு வருகிறார்கள். அதன்படி, மதுரையில் இன்று கட்சி கொடியேற்றும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மதுரை கோரிபாளையம் பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே தமிழக வெற்றிக்கழகத்திப் 50 அடி கொடி கம்பம் நடுவதற்காக அனுமதி வேண்டி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வந்தநிலையில், இன்று தமிழக வெற்றிக்கழகத்தினர் திரளானோர் கோரிப்பாளையத்தில் விழா நடைபெறும் இடத்தில் குவிந்தனர். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தின் 50 அடி கொடி கம்பம் நடுவதற்கான அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளனர்.

மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் இணைக்காததால் அனுமதி வழங்கவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட மதுரை கோரிப்பாளையம் பகுதி மாநகராட்சி எல்லைக்குள் உள்ளதால் மாநகராட்சியில் தடையில்லாச்சான்றிதழ் பெறாததால் கொடிக்கம்பம் நட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story