தூத்துக்குடிமீன்பிடி துறைமுக சீரமைப்பு பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும்: கலெக்டர்


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக சீரமைப்பு பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக சீரமைப்பு பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வலை பின்னும் கூடம், படகு ஓட்டுநர் அறை, மீன் பதப்படுத்தும் இடம், அரசு பனிக்கட்டி தயாரிக்கும் ஆலை, டீசல் பல்க், படகு பழுதுபார்க்கும் இடம், மீனவர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகம், மீன் ஏலக்கூடம் மற்றும் துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகளையும், அங்கு நடைபெறும் பல்வேறு பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடவடிக்கை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்வளத்துறை இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் உள்ளனர். இந்த குழு சார்பில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த குழு சார்பில் ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன, இன்னும் என்னென்ன வசதிகள் தேவை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. மீனவ சங்க பிரதிநிதிகளும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து உள்ளனர். மீன்பிடித் துறைமுகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆழப்படுத்தும் பணி

மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் முடிவடைந்து உள்ளன. தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் மீதம் உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் மே மாதத்துக்குள் முடிக்கப்படும். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும் என்று கூறினார். ஆய்வின் போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் வைலா, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story