தூத்துக்குடியில்புதன்கிழமை முதல்அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொடக்கம்


தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்புதன்கிழமை முதல் அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அண்ணா பஸ்நிலையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) முதல் போக்குவரத்து நடைபெறும் என்றும், வாகன நிறுத்த காப்பகங்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும், என்றும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆய்வு

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58 கோடியே 67 லட்சம் செலவில், நகரின் மையப்பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலையம் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிலையமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையத்தை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இணைந்து கடந்த 8-ந் தேதி திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் வீருகாத்தான், கோட்ட மேலாளர் அழகிரிசாமி மற்றும் அனைத்து கிளை மேலாளர்கள், விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சிவராம், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வசதிகள்

தூத்துக்குடி அறிஞர் அண்ணா பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைத்து வசதிகளுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 29 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பஸ்கள் புறப்படும் நேரம், பயணிகளுக்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க ப்படும்.

நவீன கழிப்பறைகள், மருந்தகம், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை மற்றும் சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வாகன காப்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆட்டோக்களில் வரும் பயணிகளை பஸ் நிலையத்துக்கு வெளியே இறக்கி விடுவதற்கு 2 பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்று முதல் செயல்படும்

இந்த பஸ் நிலையம் இன்று (புதன்கிழமை) முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வருகிறது. திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து புறப்படும். இந்த பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. ஏதேனும் குறைகள் இருந்தால் பயணிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது மாநகராட்சி நிர்வாகத்தையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக குறைகள் நிவர்த்தி ெசய்யப்படும்.

மினி பஸ்களை பொறுத்தவரை தற்போதுள்ள நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தே இயக்க வேண்டும். முதல் கட்டமாக இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை முழுமையாக இயக்கவிட்டு, பின்பு தேவையான வசதிகள் செய்த பின்பு மினி பஸ்களையும் இங்கிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பஸ் நிலையத்தை ஒட்டி உள்ள சாலையை விரிவாக்கம் செய்துவிட்டு அதில் மினி பஸ்களை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது, பஸ் நிலைய சுவர்களில் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள், திருச்செந்தூர் கோவில், பனிமயமாதா ஆலயம் போன்ற முக்கிய இடங்களின் படங்கள் வரையப்படும். மக்களுக்கான விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்படும். இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story