தூத்துக்குடி மாவட்ட சதுரங்க போட்டிவெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சதுரங்க போட்டி
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை காமராஜ் கல்லூரியில் நடத்தியது. போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர், 12 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 4 பிரிவுகளாக நடந்தன. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 171 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் முதன்மை நடுவராக சதுரங்க கழக துணைத்தலைவர் நந்தகுமார் செயல்பட்டார்.
பரிசளிப்பு விழா
மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு தலைமை தாங்கினார். சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வரவேற்று பேசினார். கல்லூரி முன்னாள் முதல்வர் மோகன்ராஜ் பேசினார். சிறப்பு அழைப்பாளராக அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 10, 12, 15 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 10 மாணவர்கள் மற்றும் முதல் 10 மாணவிகளுக்கு பரிசுகள் ஆக மொத்தம் 60 பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற முதல் 10 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் திரளான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.