சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மனுடன் பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சிவன் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். திருஞானசம்பந்தரின் அவதார தலமான கோவிலில் காசிக்கு இணையான அஷ்டபைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர், திருநிலை நாயகி அம்பாள், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கோவில் கணக்கர் செந்தில் தலைமையில் வழங்கப்பட்டது. அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, மாவட்ட செயலாளர் பாரிவள்ளல், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் அருண்குமார், நகர கழக செயலாளர்கள் அருண் பாலாஜி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சிவ திலகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.