3 இடங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி


3 இடங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Oct 2023 12:30 AM IST (Updated: 5 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலோர பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து ஆண்டு தோறும் கடலோர பகுதிகளில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஒத்திகை

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி தாலுகா சிலுவைப்பட்டி, திருச்செந்தூர் தாலுகா சிங்கித்துறை, ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளம் ஆகிய 3 கடற்கரை கிராமங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை பெறப்படும் போது, அந்த தகவல் பரிமாற்றமானது அரசு துறைகள் மூலம், பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது இந்த ஒத்திகையின் போது சோதிக்கப்பட்டது.

சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. முதலில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு மூலம் சுனாமி எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது. இந்த தகவல் பெறப்பட்டவுடன் அனைத்து துறை அதிகாரிகளும் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடற்கரையில் நின்றபடி கடலுக்குள் உள்ள மீனவர்களை கரைக்கு வரவழைக்கும் வகையில் கண்ணாடி மூலம் ஒளியை பிரதிபலித்து சிக்னல் செய்தனர். தொடர்ந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீடுகளில் இருந்த மக்கள் வேகமாக வெளியில் வந்தனர். அவர்களை வாகனங்கள் மூலம் முகாம்களுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

கடலில் தத்தளிப்பவர்கள்

அதேபோன்று கடலில் தத்தளிப்பவர்களை எவ்வாறு விரைந்து மீட்பது என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது குறித்தும் தீயணைப்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.

வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, கடலோர பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீஸ் துறையினர், தீயணைப்பு துறையினர், வட்டார போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி, பார்வையிட்டார். தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தாசில்தார் பிரபாகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று சிங்கித்துறை மற்றும் தருவைகுளத்திலும் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.


Next Story