அடுத்தடுத்து லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்


அடுத்தடுத்து லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரிகள் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரிகள் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

லாரிகள் மோதல்

பெங்களூருவில் இருந்து சுண்ணாம்பு பவுடர் ஏற்றி கொண்டு ஒரு லாரி சேலத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை பெங்களூருவை சேர்ந்த டிரைவர் வினய் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே நேற்று காலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற 2 லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பார்சல் லாரி எதிர் திசையிலுள்ள சேலம்-தர்மபுரி சாலையோர தொப்பூர் வனப்பகுதிக்குள் சென்று மரங்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 3 லாரிகளும் நொறுங்கின. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் வினய், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி (42) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 டிரைவர்களையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரிகள் மோதிய விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story