ஓடும் ரெயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பலி
நெல்லையில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
நெல்லையில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் சிவ்நகர் காலனியைச் சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத் மிஸ்ரா (வயது 71). இவர் ரெயில்வேயில் லோகோ இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஆன்மிக சுற்றுலாவாக தமிழகத்துக்கு வந்தார்.
நேற்று முன்தினம் ராமேசுவரத்துக்கு சென்ற இவர்கள், பின்னர் இரவில் அங்கிருந்து கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டனர். இதற்காக ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர். அப்போது ரெயிலில் சுரேந்திர பிரசாத் மிஸ்ரா, அவருடைய மனைவி ஆகியோர் ஒரு பெட்டியிலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு பெட்டியிலும் பயணித்தனர்.
ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது..
நேற்று அதிகாலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் ரெயில் நின்றது. அப்போது நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்ததாக கருதிய சுரேந்திர பிரசாத் மிஸ்ரா, மனைவி ஆகியோர் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் நாகர்கோவிலுக்கு பதிலாக நெல்லையில் தவறுதலாக இறங்கியதை உணர்ந்த தம்பதி மீண்டும் ரெயிலில் ஏற முயன்றனர்.
ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட தொடங்கியது. இதனால் பதறிய சுரேந்திர பிரசாத் மிஸ்ரா தனது மனைவியை முதலில் ரெயிலில் ஏற்றி விட்டு, பின்னர் அவரும் ஏற முயன்றார். அப்போது, சுரேந்திர பிரசாத் மிஸ்ரா நிலைதடுமாறி ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
போலீசார் விசாரணை
உடனே நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ், ஏட்டு அந்தோணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த சுரேந்திர பிரசாத் மிஸ்ராவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற முன்னாள் ஊழியர் தவறி விழுந்து, மனைவி கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.