திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: தஞ்சாவூர், மயிலாடுதுறை அணிகள் வெற்றி


திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: தஞ்சாவூர், மயிலாடுதுறை அணிகள் வெற்றி
x

பெரம்பலூரில் நடைபெற்ற திருச்சி மண்டல அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகளில் தஞ்சாவூர், மயிலாடுதுறை அணிகள் வெற்றி பெற்றன.

பெரம்பலூர்

கூடைப்பந்து போட்டி

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 வருவாய் மாவட்டங்களில் இருந்து 240 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்தன.

தஞ்சாவூர், மயிலாடுதுறை அணிகள் வெற்றி

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் பிரிவில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அணிகள் ேநற்று இறுதி போட்டியில் மோதின. இதில் தஞ்சாவூர் அணி 68-49 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. திண்டுக்கல் அணி 2-வது இடம் பெற்றது. மாணவிக்களுக்கான இறுதி போட்டியில், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அணிகள் மோதின. இதில் மயிலாடுதுறை அணி 50-36 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது. தஞ்சாவூர் அணி 2-வது இடம் பிடித்தது. இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றன.

பரிசு கோப்பை

இதனைதொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்க துணைத்தலைவருமான ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக செயலாளர் அஜிஸ் அகமது, போட்டி ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், பள்ளி தாளாளருமான ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஹரீஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.


Next Story