திருச்சி: தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்


திருச்சி: தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
x

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியது. இதனால் சாமியானா பந்தல் சரிந்து கீழே விழுந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் மணிகண்டன் என்ற ஆசிரியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்து பின்னர் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story