திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
திருட்டு
மணிகண்டம் அருகே உள்ள முள்ளிப்பட்டி பாலன் நகரில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறைக்குள் கடந்த 22-ந்தேதி மர்ம ஆசாமிகள் புகுந்து திருட்டில் ஈடுபட்டனர். அதேபோல கடந்த 25-ந் தேதி இரவு நாகமங்கலத்தில் உள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட உபகரணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
சிறுவன் கைது
இந்த நிலையில் இத்திருட்டில் ஈடுபட்டது 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் என தெரியவந்தது. இதில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான வெல்டிங் உபகரணங்கள், கேமரா உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
டிரைவரை தாக்கிய கண்டக்டர் கைது
*லால்குடி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49). இவர் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ் நின்ற போது அங்கே இருந்த மற்றொரு தனியார் பஸ் கண்டக்டரான லால்குடி வெள்ளனூரை சேர்ந்த ஜனார்த்தனன் (33) என்பவர் ஏன் பஸ்சை எடுக்க வில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்து ரமேஷை தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில் கோட்ைட போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்தனர்.
வியாபாரிகள் மீது தாக்குதல்
*உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் புனித மதலேனா மரியாள் ஆலய திருவிழாவையொட்டிபழனி குபேரப்பட்டினம் தண்டபாணி தெருவைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (54) தற்காலிக கடை அமைத்து இருந்தார். அந்த கடையில் சாகுல்ஹமீது என்பவர் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு மீதமுள்ள பொருட்களை கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கீ செயின் கேட்டு தகராறு செய்து மகுடீஸ்வரனையும், சாகுல்ஹமீதையும் தாக்கி, அவர்களது செல்போனை பறித்து, உடைத்தனர். இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (28), துரைமுருகன் (26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலில் பற்றிய தீ
* மணப்பாறை அருகே உள்ள ஆவிக்காரப்பட்டியில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஒரு வயலில் உள்ள முளைத்து இருந்த நாணல் செடிகளில் தீப்பற்றியது. இந்த தீ அருகே உள்ள வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களுக்கும் பரவத்தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.