திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு


திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு
x

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை 3-ந்தேதி முற்றுகையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையம் முற்றுகை

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. இதற்கு இயக்கத்தின் மாநில தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த சம்பவத்தில் விசாரணை என்கிற பெயரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்துவதை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் வருகிற 3-ந்தேதி திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

கவன ஈர்ப்பு மாநாடு

வன்கொடுமைகளுக்கு எதிராக திருச்சி, நெல்லை, கடலூர், திருப்பூர், வேலூர் ஆகிய 5 மாநகராட்சிகள் முன்பு வருகிற 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து கிராமத்திலும் சாதிக்கு ஒரு சுடுகாடு என்று இருப்பதை ஒழிக்க சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே ஊரு ஒரே சுடுகாடு என்கிற தலைப்பில் கருத்தியல் பிரசாரம் மேற்கொள்ளப்படும். துப்புரவு பணிகளுக்கு என்று புதிய கருவிகளை உருவாக்குகிற நோக்கத்துடன் மத்திய-மாநில அரசுகள் துப்புரவு பொறியியல் துறையை தொடங்கிட வலியுறுத்தி ஏப்ரல் இறுதி வாரத்தில் சென்னையில் கவன ஈர்ப்பு மாநாடு நடத்தப்படும்.

சென்னை ஐ.ஐ.டி.யின் அநீதிகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கம் ஒரிரு மாதங்களில் நடைபெறும். குடி ஊழியம் என்னும் குலத்தொழில்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விரிவாக இயக்கங்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story