மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள், பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம்


மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள், பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 Oct 2023 3:00 AM IST (Updated: 14 Oct 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர், பெண்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர், பெண்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

கொடைக்கானலை சேர்ந்த கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கத்தினர் மற்றும் பழங்குடியின மக்கள் நேற்று பெருமாள்மலை பிரிவு பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அடுக்கம், வடகவுஞ்சி, பாச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பாலமலை, பூதமலை, வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், கும்பூர்வயல், குறிஞ்சிநகர் உள்ளிட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

உண்ணாவிரத போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் போராட்டம் நடத்தியவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த கொடைக்கானல் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேசினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இருப்பினும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து கிராம மக்கள், பெண்கள் அமைப்பினர் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் பெருமாள்மலை பிரிவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story