கடமலைக்குண்டுவில் 6 மாதங்களாக மலைக்குகையில் வசிக்கும் பழங்குடியின மக்கள்
கடமலைக்குண்டுவில் கடந்த 6 மாதங்களாக மலைக்குகையில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பழங்குடியின மக்கள்
ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் பாறை இடுக்குகளில் வசித்த வந்த பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில், கடமலைக்குண்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அரசு சார்பில், தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் குடியேறிய 5 குடும்பங்களை அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்கள், அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அந்த குடும்பத்தினர் அரசு கொடுத்த தொகுப்பு வீடுகளை விட்டுவிட்டு மலைக்குகையில் தஞ்சம் புகுந்துள்ளனர். 5 குடும்பங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் பாறை இடுக்குகளில் தங்கி உள்ளனர். அதில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
மலைக்குகையில் தஞ்சம்
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது, நாங்கள் அரசு கட்டி கொடுத்த வீடுகளில் வசித்து வந்தோம். அங்கு உள்ள சிலர் எங்களை அடித்து துரத்தினர். இதனால் நாங்கள் கடந்த 6 மாதங்களாக மலைக் குகையில் வசித்து வருகிறோம். மலை அடிவாரத்தில் ஓலை குடிசையில் வனவிலங்குகள் அச்சத்துடன் குழந்தைகளுடன் தங்கி வருகிறோம். மலைப் பகுதியில் இருந்து விறகு, மூலிகை கிழங்குகள் எடுத்து வர வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர்.
இதனால் எங்களுக்கு ஒரு நாள் உணவு கிடைப்பதே பெரிதாக உள்ளது. மற்றவர்களை போலவே எங்களுக்கும் வீடுகளில் தங்கி தூங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள சாதாரண மக்களே பல்வேறு குறைகளை கூறி வருகின்றனர். ஆனால் உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இடம், மின்சாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கும் நாங்கள் அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் குடியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.