பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
தமிழகத்தில் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்திலேயே நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம், மலையப்ப நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகளும், பிளஸ்-2 முடித்து மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வு எழுத தயாராகி வரும் மாணவியான கோகிலா என்பவருக்கு நரிக்குறவன் என்ற பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. மேலும் 15 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) அந்த சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தந்தையும், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு தலைவருமான காரை சுப்பிரமணியன் கூறுகையில், நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த மத்திய-மாநில அரசுகளுக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மற்றும் பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்காக போராடிய அரசியல் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவன் என்ற பழங்குடியினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் பல்வேறு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யும், என்றார்.