இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை ஒத்திவைப்பு
இலங்கை போலீஸ்காரர் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி இலங்கை போலீசார், 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுர குமார என்பவரை போலீசார் பிடித்தனர். இவர் இலங்கை துறைமுக காவல்நிலைய போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் (வயது 32) அண்ணன் ஆவார். போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா, இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை தனது பணி நேரத்தில் திருடி சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த அவர் பைபர் படகு மூலம் தமிழகம் தப்பிவந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமீன் பெற்று, திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டு நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.