பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரங்கள்
பலத்த காற்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு சாலையில் நேற்று காலை பலத்த காற்று வீசியது. இதில் வாகை மரம் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது. பழமையான மரம் என்பதால் பெரிய அளவிலான மரமாக இருந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரம் அறுக்கும் எந்திரங்கள் உதவியுடன் மரங்களை வெட்டி எடுத்து அகற்றினர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்து சீரானது. மரம் கீழே விழுந்த பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். மரம் கீழே விழுந்த நேரத்தில் அவர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மணிக்கூண்டு அருகே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.