கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்தது


கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்தது
x
தினத்தந்தி 23 Oct 2023 1:15 AM IST (Updated: 23 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால், மரங்களின் வேர்கள் வலுவிழந்து அவ்வப்போது மரங்கள் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 4.15 மணியளவில் குஞ்சப்பனை பகுதியில் திடீரென ராட்சத மரம் ஒன்று பலத்த சத்தத்துடன் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.


உடனடியாக ரோந்துப் பணியில் இருந்த சப் -இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று, சரிந்து கிடந்த மரத்தின் கீழ் உள்ள இடைவெளி வழியாக இரண்டு மற்றும் நகர வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தி போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்தார். தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மின் வாளால் மரத்தை வெட்டி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்துண்டுகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மரம் சரிந்து விழுந்த நேரத்தில் அங்கு வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தொடர் விடுமுறை காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வழியாக தங்கள் வாகனங்களில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 3 மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story