மதுராந்தகம் அருகே சாராயம் காய்ச்சி குடித்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி


மதுராந்தகம் அருகே சாராயம் காய்ச்சி குடித்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
x

கோப்புப்படம் 

மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த தேவன் என்பவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்துள்ளார்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் காவல் நிலையத்துக்குட்பட்ட மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் (65 வயது). இவர் அடுப்புக்கரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாக தெரிகிறது.

இது குறித்து மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் ஆகியோருக்கு தெரியவந்தது. அதன் பேரில் நேற்று போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தேவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சாராயத்தை காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகியோருக்கு குடிக்க கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து மதுராந்தகம் ஆர்.டி.ஓ. தியாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மணி, பெருமாள், அய்யனார் ஆகியோரை தேடி பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ராதா கிருஷ்ணன், மதுரை ஆகியோரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story