போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் ஏமாற்றம் அளிக்கிறது: ராமதாஸ்


போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் ஏமாற்றம் அளிக்கிறது: ராமதாஸ்
x

கோப்புப்படம் 

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 83 மாதங்களாக அக விலைப்படி உயர்த்தப்பட வில்லை கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. இந்த குறைகள் ஊதிய ஒப்பந்தத்தில் சரி செய்யப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், இது குறித்து பரிசீலிக்கக் கூட அரசு முன்வராதது மிக மோசமான உரிமை மறுப்பாகும்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளின் போது, அதிகாரிகள் ஆதிக்கம் தான் நிலவியதாகவும், அதனால் தான் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோனதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரிகள் தரப்பில் தரப்பட்ட அழுத்தத்திற்கு பணிந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற அநீதியை போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது அரசு திணித்திருக்கிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்பதே மிக நீண்ட காலம் ஆகும். அதை 4 ஆண்டுகளாக நீட்டிப்பது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

அதையும் கடந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற உரிமையை தந்தை கொடுத்தார் தனயன் எடுத்தார் என்ற பழிச்சொல்லுக்கு இன்றைய முதல்-அமைச்சர் ஆளாகிவிடக் கூடாது.

எனவே, ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அத்துடன் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story