திருநங்கைகள் திடீர் சாலை மறியல்
அம்பையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை:
அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் 5 திருநங்கைகள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அவர்கள் வசிக்கும் வீட்டில் அம்பைைய சேர்ந்த ஒருவர் நேற்று மதியம் அத்துமீறி நுழைந்து தகாத முறையில் செயல்பட்டார் என்று அவரை திருநங்கைகள் பிடித்து அம்பை போலீசில் ஒப்படைத்தனர். பின்பு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதை அறிந்த திருநங்கைகள் சுமார் 8 பேர், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அம்பை தாலுகா அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.