திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம்
தென்காசியில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகள் பலர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், ஆதார் அட்டை, திருநங்கை அடையாள அட்டை உள்ளிட்டவை கேட்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் சமூக நலத்துறை மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சதாசிவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல், கூட்டுறவு துறை மேலாளர் ரெனிஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.