போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்


போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2023 10:15 PM GMT (Updated: 27 Aug 2023 10:15 PM GMT)

ஊட்டியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-

நீலகிரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், உழவன் செயலியின் செயல்பாடுகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில், பராமரிக்கப்பட்டு வரும் மாணவ-மாணவிகளின் தங்கும் விடுதிகளை ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

போட்டி தேர்வுக்கு பயிற்சி

நான் முதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவ-மாணவிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டி நகராட்சி சார்பில், காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில், போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story