மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சி
வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து தலைமையேற்று இத்திட்டம் பற்றியும் இத்திட்டத்தின் மானிய விவரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். இதில் சிறப்பு பயிற்சியாளராக குன்றக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் செல்வராஜ் கலந்து கொண்டு மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும் இதில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் இதனால் விவசாயிகள் அடைய கூடிய நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண்மை அலுவலர் கமலாதேவி கலந்து கொண்டு வேளாண்மைத்துறையின் கீழ் மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இடுபொருட்களின் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். தேவகோட்டை தோட்டக்கலை அலுவலர் தாரணிகா கலந்து கொண்டு இத்திட்டத்திற்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படும் பழ மரக்கன்றுகள் பற்றியும் இதனுடைய சாகுபடி தொழில்நுட்பங்களையும் எடுத்துரைத்தார். மேலும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமான கறவை மாடு பெறும் இனத்தில் பசு வாங்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். வேளாண்மை உதவி அலுவலர்கள் தியாகராஜன் மற்றும் விஜய் கலந்து கொண்டு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசாந்த் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலளார்கள் செய்திருந்தனர்.