தனிப்பட்டா வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி


தினத்தந்தி 5 Oct 2023 12:30 AM IST (Updated: 5 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டணமின்றி பட்டா வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி கோத்தகிரியில் நடந்தது.

நீலகிரி


கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது நிலங்களை கட்டணமின்றி உட்பிரிவு செய்து தனிபட்டா வழங்குவதற்காக கலெக்டரின் உத்தரவின்படி நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியர்கள் மற்றும் நில அளவையர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கோத்தகிரி வட்டத்தில் நவீன நில அளவை கருவிகளைக் கொண்டு மறு நில அளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த திட்டப் பணிகள் மூலம் கோத்தகிரி வட்டத்தில் 15 வருவாய் கிராமங்களிலும் உள்ள அனைத்து சர்வே எண்களும் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக மறு நில அளவை செய்து நில ஆவணங்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் வருவாய் பதிவுகள் அதாவது அனைத்து பட்டாவில் உள்ள பெயர்கள் புதுப்பிக்கப்படுவதுடன், கூட்டுப் பட்டாவில் இருப்பவர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி புதிய உட்பிரிவுகள் செய்து தனிப்பட்டா வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் குறிப்பிட்ட தேதியில் நில அளவை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.


முதல் கட்டமாக கொக்கோடு கிராம மக்களுக்காக அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அல்லி மாயார் மற்றும் கல்லம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கோவை மண்டல தொழில்நுட்ப மேலாளர் முத்துராஜா அனைவருக்கும் பயிற்சி அளித்தார். பின்னர் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் கொக்கோடு பழங்குடியின கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், நில அளவைத் துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியர்கள், நில அளவையர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story