விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

தென்காசி

ஆலங்குளம் வட்டாரம் ஊத்துமலை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.34 ஆயிரம் மானிய விலையில் வீராணம் பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற விவசாயிக்கு சுழற்கலப்பை வழங்கினார். பின்னர் மேலமருதப்பபுரம் மற்றும் மேலக்கலங்கல் (உச்சிப்பொத்தை) கிராமத்தில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் முருகானந்தம் தலைமையிலும், மேலமருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் வசந்தா, துணை பஞ்சாயத்து தலைவர் பாரதிராஜா மற்றும் மேலக்கலங்கல் பஞ்சாயத்து தலைவர் அரண்மனைத்தாய், துணை பஞ்சாயத்து தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணியாளர்களை கொண்டு பனை விதை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை- உழவர் நலத்துறை மூலம் உச்சிப்பொத்தை கிராமத்தில் முதல்-அமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் தொடர்பான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், உளுந்து சாகுபடி குறித்து பேசினார். வேளாண் மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலர் முருகன், மானாவாரி வேளாண்மையில் கோடை உழவு குறித்து முன்னோடி விவசாயி ஆறுமுகம் ஆகியோர் பேசினர். பயிற்சியின் நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி, சூடோமோனாஸ் உயிர் பூஞ்சான கொல்லி குறித்த விளக்கமும், உளுந்து விதையில் செயல்விளக்கமும் செய்து காட்டினார். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் சுமன், மணிகண்டன் மற்றும் மேலக்கலங்கல் பகுதி விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுமன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வ கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story