குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் கூடல்நகரில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணி நடந்து வருகிறது. இதனால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயில், மதுரை ரெயில் நிலையம் வழியாக வழக்கம் போல இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கு கூடல்நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் உண்டு. இதற்கிடையே, தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக, எலெக்டிரிகல், சிக்னல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், எலெக்டிரிகல் பிரிவில், மதுரை ரெயில்நிலையத்தில் மின்சார ரெயில் என்ஜின் செல்வதற்கான உயர்அழுத்த மின்பாதை வயர்கள், கம்பங்கள் இடமாற்றும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று இந்த பணிகளை மேற்கொள்ள வசதியாக மதுரை ரெயில் நிலைய மின்பாதைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மார்க்கம் மற்றும் விருதுநகர் மார்க்கத்தில் இருந்து மதுரை ரெயில் நிலையம் வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் நேற்று மாலை 4 மணிக்கு கூடல்நகர் ரெயில் நிலையம் வந்தது. ஆனால், மதுரை ரெயில் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால், ரெயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ரெயில், சுமார் 2 மணி நேரம் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலை 6.05 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலை தொடர்ந்து வந்து கொண்டிருந்த மயிலாடுதுறை-செங்கோட்டை, ஈரோடு-நெல்லை ஆகிய ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.