தென்மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' வருவது எப்போது?
தென்மாவட்டங்களுக்கு ‘வந்தே பாரத்’ வருவது எப்போது?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன.
வந்தே பாரத் ரெயில்
இந்த நிலையில், கடந்த வருடம் சுதந்திரதினத்தின் போது, 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வந்தே பாரத் எனப்படுவது, ரெயில்-18 என்று பெயரிடப்பட்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாக கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தனது முதல் சேவையை தொடங்கியது.
இந்த ரெயில், புதுடெல்லி-வாரணாசி இடையே 760 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட்டது. இந்த ரெயில் காலை 6 மணிக்கு புதுடெல்லியில் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது. இந்த ரெயில் கான்பூர், அலகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில் வாரணாசியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி வந்தடைகிறது. ஆனால் இந்த ரெயிலின் சராசரி வேகம் மணிக்கு வெறும் 95 கி.மீ. மட்டுமே ஆகும்.
மற்றொரு ரெயில் புதுடெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீமாதா வைஷ்ணவா தேவி கத்ரா ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தனது முதல் பயணத்தை தொடங்கியது. அதன்படி, புதுடெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2 மணிக்கு கத்ரா சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கத்ராவில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில், அம்பாலா காண்ட், லூதியானா மற்றும் ஜம்முதாவி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். ஆனால், இந்த ரெயில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்பட்டு 655 கி.மீ தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கிறது.
வலுக்கும் கோரிக்கை
அதேபோல, தென்னக ரெயில்வேயில் இயக்கப்படும் வந்தேபாரத் ரெயிலை சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை தென்மாவட்டங்கள் அனைத்தும் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏற்கனவே, தென்மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ராஜதானி, சதாப்தி, டபுள் டக்கர், ஜனசதாப்தி உள்ளிட்ட அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. இதில் மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட பயணிகளுக்கு எந்த பலனும் இல்லாமல் உள்ளது. எனவே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
பெட்டிகள் தயாரிப்பு சாத்தியமா?
வந்தே பாரத் ரெயில் தமிழக ரெயில் பயணிகளிடையே பெரும் எதிர்பார்பபை பெற்றுள்ளது. அதாவது, ரெயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றான ஐ.சி.எப். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ளது. எனவே, இங்கு தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தமிழக பயணிகள் சேவைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஆனால், தற்போது வரை தமிழகத்தில் வந்தேபாரத் ரெயில் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதற்கு பெட்டிகள் தயாரிப்பில் ஏற்படும் காலதாமதம்தான் காரணம் என கூறப்படுகிறது.
காலதாமதம் குறித்து ஆராய, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு வந்திருந்தார். இது அவரது 2-வது ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை ஒரேயொரு வந்தே பாரத் ரெயிலுக்கான 16 பெட்டிகள் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்த படி ரெயில்கள் இயக்க சுமார் 1,110 பெட்டிகள் தேவைப்படுகிறது. இதனை தயாரிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக தமிழக ரெயில் பயணிகளிடையே இந்த விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரெயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு எத்தனை பெட்டிகள் தயாரிக்க முடியும் என்பது குறித்த திட்ட அறிக்கை பெறாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டதா அல்லது அதிகாரிகள் வழக்கம் போல, தவறான தகவல்களை ரெயில்வே அமைச்சகத்துக்கு கொடுத்தனரா என்பது புரியாத புதிராக உள்ளது.
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பழைய பெட்டிகளை மாற்றிவிட்டு, எல்.எச்.பி. வகை பெட்டிகளை நாட்டில் உள்ள 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட் அறிவிப்பு படி வந்தேபாரத் ரெயில் பெட்டிகளை தயாரிப்பது சாத்தியமா? என தெரியவில்லை.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால் தென்மாவட்ட பயணிகளுக்கு வந்தே பாரத் வந்து சேருமா? என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.