திருச்செந்தூர் அருகே விளையாடியபோது சோகம்;தண்ணீர் நிரப்பிய வாளிக்குள் விழுந்து 1½ வயது குழந்தை சாவு
திருச்செந்தூர் அருகே தண்ணீர் நிரப்பிய வாளிக்குள் விழுந்து 1½ வயது குழந்தை இறந்து போனது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே விளையாடியபோது தண்ணீர் நிரப்பிய வாளிக்குள் விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
1½ வயது ஆண் குழந்தை
திருச்செந்தூர் அருகே காயாமொழி வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் பாலசந்துரு. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை தர்ஷன்.
நேற்று பகலில் சுபஸ்ரீ வீட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். தர்ஷன் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான்.
தண்ணீர் வாளியில் விழுந்தான்
அப்ேபாது, பக்கத்து வீட்டின் முற்றத்தில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதை பார்த்த தர்ஷன் அங்கு சென்று தண்ணீரில் விளையாடினான். அப்போது எதிர்பாராவிதமாக அவன் திடீரென்று தண்ணீர் வாளியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி மயங்கினான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து குழந்தையை சுபஸ்ரீ தேடினார். பக்கத்து வீட்டு முற்றத்தில் தண்ணீர் வாளியில் குழந்ைத மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கதறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.
பரிதாப சாவு
அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.
உடனடியாக குழந்தையை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே தண்ணீர் நிரப்பிய வாளியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.