விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்: கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
வானூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை ஊராட்சிக்குட்பட்ட காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அன்னலட்சுமி. இத்தம்பதிக்கு ஒரு மகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர்களில் சிவா என்ற பெயருடைய 2 வயது குழந்தையை காணவில்லை. மற்ற குழந்தைகளிடம் விசாரித்தபோது விவசாய கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
கிணற்றில் விழுந்து பலி
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கிணற்றில் தவறி விழுந்திருக்குமோ? என்ற சந்தேகத்தில் தந்தை ராஜா கிணற்றில் குதித்து தேடிப்பார்த்தார். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை.
இது குறித்து ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆரோவில் போலீசார், வானூர் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் விரைந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றின் அடியில் சேற்றில் சிக்கி இருந்த குழந்தை சிவா உடலை மீட்டனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.