பொங்கலூர் அருகே பரிதாபம்: 2 மாணவிகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி


பொங்கலூர் அருகே பரிதாபம்: 2 மாணவிகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி
x

வீட்டை விட்டுச்சென்ற 3 பேரும் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவர்களது பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்தபோது 2 மாணவிகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் நகர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் வீணா (17). திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் பிரீத்தி (18). இவர்கள் 3 பேரும் உறவினர்கள். இதில் வீணா பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி உள்ளார். பிரீத்தி ஐ.டி.ஐ.படித்து வருகிறார். சந்தோஷ் படித்து முடித்து வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் பொங்கலூர் வந்தனர். பின்னர் பொங்கலூர் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பக்கம் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கச் சென்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. வாய்க்காலில் இறங்கி குளித்த போது 3 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனிடையே வீட்டை விட்டுச்சென்ற 3 பேரும் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவர்களது பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் பொங்கலூர் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மோட்டார் சைக்கிள் சந்தோஷின் மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. எனவே சந்தோஷ் உள்பட 3 பேரும் வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதி போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். பின்னர் காணாமல் போன 3 பேரையும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்

இதில் பிரீத்தி மற்றும் வீணா ஆகியோரது உடல்கள் அரசு விதைப்பண்ணை அருகே மீட்கப்பட்டது. அதன் பின்னர் தீவிர தேடுதலுக்கு பின்னர் சந்தோஷின் உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story