குரோம்பேட்டையில் சோகம்: கார் மோதி பெண் போலீஸ் ஏட்டு பலி - விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவ சென்றபோது பரிதாபம்


குரோம்பேட்டையில் சோகம்: கார் மோதி பெண் போலீஸ் ஏட்டு பலி - விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவ சென்றபோது பரிதாபம்
x

விபத்தில் சிக்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு, கார் மோதி பலியானார்.

சென்னை

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷீலா ஜெபமணி(வயது 51). இவர், தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் மார்ட்டின் ராஜ்குமார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுடைய மூத்த மகள் பெர்சியால் ஜெபக்குமாரி, பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் அக்னஸ், பிளஸ்-1 படித்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ரமாபிரபா, பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்்கு செல்லும்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை அருகே விபத்தில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தன்னுடன் பணிபுரிந்த ஷீலா ஜெபமணியிடம் செல்போனில் தகவல் கொடுத்தார். இதையடுத்து விபத்தில் சிக்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவுவதற்காக தாம்பரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஷீலா ஜெபமணி குரோம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சிக்னல் அருகே செல்லும் போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயம் அடைந்த ஷீலா ஜெபமணியை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது தலையில் 7 தையல்கள் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஷீலா ஜெபமணி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான பல்லாவரத்தை சேர்ந்த சக்தி(41) என்பவரை கைது செய்தனர்.

பலியான ஷீலா ஜெபமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயின் உடலை பார்த்து அவரது 2 மகள்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஷீலா ஜெபமணி உடலுக்கு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ேமலும் அவரது மகள்கள் மற்றும் கணவருக்கு ஆறுதல் கூறினார். ஏராளமான போலீஸ் அதிகாரிகள், சக பெண் போலீசார் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீஸ் மரியாதைவுடன் அவரது உடல் தாம்பரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் சிக்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு உதவ சென்ற பெண் போலீஸ் ஏட்டு விபத்தில் சிக்கி பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story