தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
கூடலூரில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றின் குறுக்கே தரைப்பாலம் மூழ்கியதால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூரில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றின் குறுக்கே தரைப்பாலம் மூழ்கியதால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆதிவாசி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு கூடலூர் தாலுகா பாடந்தொரை, ஆலவயல் உள்பட பல இடங்களில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு கரையோரம் உள்ள இருவயல், குனில் உள்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் கூடலூர் புரமணவயல் ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதைதொடர்ந்து 72 பேரை அங்கிருந்து வெளியேற்றி, புத்தூர்வயல் அரசு பள்ளி முகாமில் வருவாய்த்துறையினர் தங்க வைத்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இதற்கிடையே கூடலூர் பகுதியில் கனமழை பெய்ததால் மாயாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு-மசினகுடி செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது என்றனர். கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மாக்க மூலா பகுதியில் மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்ததால், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது.
வாழைகள் முறிந்தன
தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பாடி பகுதியில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் மனு குட்டன் உள்பட பல விவசாயிகளின் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் கவலை அடைந்தனர்.
பந்தலூர்
இதேபோல் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் தொடர் மழையால் இஞ்சி, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. பந்தலூர் தாலுகாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே செட்டிவயல் ஆதிவாசி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் ஆதிவாசி மக்கள் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆதிவாசி மக்களை மீட்டு பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி முகாமில் தங்க வைத்தனர். இதேபோல் அம்பலமூலா அருகே மணல்வயல் கிராமத்திலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மண் சரிவு
தகவல் அறிந்த அம்பலமூலா போலீசார், வருவாய்துறையினரும் அவர்களை மீட்டு அரசு தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைத்தனர். மேலும் மணல்வயல் பகுதியில் உள்ள விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்கள் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.
கூடலூர்-கோழிக்கோடு சாலை பாண்டியாறு கரையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோரம் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையில் மண் சரிவு ஏற்பட்டதில் பழனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. தொடர்ந்து பழனி குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வீடுகள் சேதம்
இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி காவதிவயல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அசிஸ் என்பவரது வீடு சேதமானது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்வதி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாடந்துறை அருகே கடமகொல்லியில் கோபி என்பவர் வீடும் மண் சரிவால் இடிந்து சேதமானது. இதற்கிடையே கூடலூர் நகராட்சி 1-வது வார்டு தட்டக்கொல்லி காலனியில் தடுப்புச்சுவர்கள் இல்லாததால் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
வெள்ள சேதம் விவரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர்-வயநாடு சாலை பாடந்தொரை பஜார் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது.
ஊட்டி, தலைகுந்தா, கல்லட்டி, பேரார், தொட்டபெட்டா பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று எந்திரம் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். ஊட்டி-அவலாஞ்சி சாலையில் இத்தலார், எல்லகண்டி பகுதிகளில் மரங்கள் விழுந்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை
சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் மூலம் மண் சரிவை அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களில் 16 வீடுகள் பகுதி சேதமடைந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டு இருந்தார். தொடர் மழையால் நீலகிரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.