காவிரி பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்
காவிரி பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே உள்ள காவிரி பாலம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. பஸ், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓயாமரி சுடுகாடு வழியாக சென்று சென்னை பைபாஸ் சாலை வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பி வருகின்றன. ஆனாலும் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிக்கு இடையூறு இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக காவிரி பாலத்தில் அடைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில் ஒருபுறம் மட்டும் சிறிய இடைவெளிவிட்டு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று காலை வேலைக்கு செல்வோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோர், வியாபாரிகள் என ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் காவிரி பாலம் வழியாக செல்ல திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.