சாலை விரிவாக்கத்தால் போக்குவரத்து நெரிசல்
கந்தம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகலப்படுத்தும் பணி
புகழூர் நகராட்சி கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் கந்தம்பாளையம் வரை கழிவுநீர் வடிகாலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் தார் சாலையில் கந்தம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் வரை தார் சாலையை அகலப்படுத்தும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிக்காக சாலையின் நெடுவிலும் 4-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடைவிடாமல் குழிகள் பறிக்கப்பட்டு அதிலிருந்து மண்களை ஏராளமான லாரிகளில் ஏற்றி வெளிப்பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
தொடர்ந்து அப்பகுதியில் குழி பறிக்கப்பட்டு, பறித்த குழியில் செயற்கை மணலுடன் ஜல்லிகள் கலந்து குழியை நிரப்பி வருகின்றனர். மேலும் கந்தம்பாளையம் பகுதியில் இருபுறமும் நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை வெட்டி எடுத்து விட்டனர்.
சாலையின் ஒருபுறம் பொக்லைன் எந்திரமும், மறுபுறம் லாரிகளும் நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிலை தடுமாறி செல்கின்றன. தார் சாலை ஓரத்தில் நெடுவிலும் லாரிகளும், பொக்லைன் எந்திரங்களும் நிறுத்தப்பட்டு பணிகள் செய்ததால் அந்த வழியாக பஸ்கள், லாரிகள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு செல்கின்றனர்.
கோரிக்கை
சில நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாதபடி லாரிகள் நிற்பதால் நீண்டநேரம் ஆகிறது. தார் சாலை விரிவாக்கத்தின் போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு விட்டதால் புதிதாக குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்கவும், வாகனங்கள் தங்குதடையின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.