திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்


திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
x

6 மாத கால சீரமைப்பு பணிக்கு பிறகு திருச்சி காவிரி பாலத்தில் நேற்று போக்குவரத்து தொடங்கியது. மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.என்.நேரு பாலத்தை திறந்து வைத்தார்.

திருச்சி

6 மாத கால சீரமைப்பு பணிக்கு பிறகு திருச்சி காவிரி பாலத்தில் நேற்று போக்குவரத்து தொடங்கியது. மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.என்.நேரு பாலத்தை திறந்து வைத்தார்.

பராமரிப்பு பணிகள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த பாலம் 0.6 கிலோ மீட்டர் நீளமும், 15 கண்களும் கொண்டது. மொத்த அகலம் 19.20 மீட்டர். பாலத்தின் 32 தட்டுகளின் இணைப்பு பகுதி மற்றும் இப்பாலம் கட்டப்படும் போது வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளின் ஆயுள்காலம் முடிந்து விட்டதாலும், பாலத்தின் ஓடுதளத்தில் செல்லும் கனரக வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும், அதன் விரியும் தன்மையும், அதிர்வு தாங்கும் சக்தியும் குறைந்தது. அதுமட்டுமின்றி தொடர் மழையின் காரணமாக ஓடுதளம் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் பள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் வாகனம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

ரூ.120 கோடியில் உயர்மட்ட பாலம்

பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து, புனரமைப்பு பணிகள் ரூ.6 கோடியே 84 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காவிரி பாலத்தில் போக்குவரத்தினை நிறுத்தி, வாகனங்கள் மாற்று பாதையில் செல்லும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தொடர் மழை பெய்ததால் பாலத்தின் புனரமைப்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இருந்த போதிலும் பாலத்தின் மேற்பரப்பில் புதிதாக இணைப்பு பகுதி பொருத்தும் பணிகள் மற்றும் இதர முக்கிய பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட்டன. பாலத்தின் மேல் ஓடுதளத்தில் தார் தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி பாலத்தின் மேல்புறம் புதிதாக ஒரு உயர்மட்ட பாலம் கட்டுதல் தொடர்பாக அரசிற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, ரூ.120 கோடி மதிப்பில் அரசின் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story