விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்


விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல்விதைகளை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தொிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் வளர்ச்சி திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகளை பெற்று சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் சாகுபடி குணங்கள் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உழவன் செயலி மூலம்

மேலும் பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தூயமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறுகமணி ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைகளை விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடையலாம்.

பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு கிலோ ரூ.50 நிர்ணயிக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 10 கிலோ வரை மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னுரிமை

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களுடன் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிக்கொள்ளலாம். தங்கள் நிலங்களில் குறைந்த பரப்பில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்து விற்பனை செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story