கேரள பாரம்பரிய ரத ஊர்வலம்


கேரள பாரம்பரிய ரத ஊர்வலம்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM (Updated: 23 April 2023 6:46 PM)
t-max-icont-min-icon

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கேரள பாரம்பரிய ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கேரள பாரம்பரிய ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ரத ஊர்வலம்

கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோத்தகிரி மறுநாடன் மலையாளிகள் சங்கம் சார்பில், கேரள பாரம்பரிய ரத ஊர்வலம் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. கேரள பஞ்சவாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், கண்ணைக் கவரும் காவடி நடனம், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன், இசைக்கருவிகள் முழங்க அலங்கார ரதங்கள் அணிவகுத்து வந்தன.

திருவீதி உலா

ஊர்வலத்துக்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து தாலம் ஏந்தியவாறு சென்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் 1 மணிக்கு கோத்தகிரி அய்யப்பன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில அம்மன் எழுந்தருளி பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். இதில் பிரமாண்டமான உருவத்தில் அமைக்கப்பட்டு இருந்த அனுமான், அரக்கர்களை வதம் செய்யும் தத்ரூபமான காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

வாணவேடிக்கை

அம்மன் திருவீதி உலா சதுக்கம் வந்தடைந்தவுடன், இரவு 9 மணிக்கு கோத்தகிரி காந்தி மைதானத்தில் கண்ணை கவரும் வாணவேடிக்கை நடந்தது. இதை காண கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் காந்தி மைதானத்திற்கு வந்து வாணவேடிக்கையை கண்டு களித்தனர். கேரள ரத ஊர்வலத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோத்தகிரியில் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதையொட்டி கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோத்தகிரி கேரள சமாஜத்தினர் செய்திருந்தனர்.


Next Story