வணிகர்கள் திடீர் கடையடைப்பு போராட்டம்
பிரம்மதேசம் அருகே உரக்கடை வியாபாரியை தாக்கியவரை கைது செய்யக்கோரி வணிகர்கள் திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
பிரம்மதேசம்
வியாபாரி மீது தாக்குதல்
பிரம்மதேசத்தை அடுத்த முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வைத்தியநாதன்(வயது 64). உரக்கடை வியாபாரியான இவரை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த வைத்தியநாதன் புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கந்தாடு கிராமத்தை சேர்ந்த பழனி மகன் அசோகன்(27), என்பவர் உரம் வாங்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அவர் வைத்தியநாதனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கடையடைப்பு
இந்த நிலையில் வைத்திநாதன் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று காலை முருக்கேரி மற்றும் சிறுவாடி பகுதியை சேர்ந்த அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வைத்தியநாதனை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட வணிகர்கள் முருக்கேரி கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.