திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x

திரவ உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

உணவு பாதுகாப்பு நெறிமுறைகள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடை கால உணவை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களை தயாரிக்க பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் நன்னீராகவும் இருக்க வேண்டும்.

சுகாதாரமான முறையில்

மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் ரசீது வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ற வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குளிரூட்டப்பட்ட உணவு தர ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என்று உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.

பெரிய ஐஸ் கட்டிகளை எடுத்து செல்ல வைக்கோல், சணல்பை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய தொட்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு உரிமம்

அதே போன்று நுகர்வோர் கடையில் திரவ உணவுப்பொருட்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டு போகும் நிலையில் பொருட்கள் இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடைக்காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story