திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு


திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு
x

திருவொற்றியூர் மார்க்ெகட் பகுதியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் மீன் கடைகள் உள்ளது. இதில் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.29 லட்சம் செலவில் நகர்ப்புற ஆரோக்கிய சுகாதார நிலையம் அமைய உள்ளது.

இதற்காக அந்த பகுதியில் உள்ள 24 கடைகளை மாநகராட்சி சார்பில் இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ப.ரவி, நிர்வாகிகள் செந்தில் முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதிய கடைகள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மார்க்கெட் மிகவும் பழமை அடைந்து விட்டதால் அதனை மொத்தமாக அப்புறப்படுத்தி விட்டு புதிதாக 350 கடைகள் கட்டப்படும். அதில் பாதிக்கப்பட்ட 24 கடைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

அதைதொடர்ந்து கடைகளை இடிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story