வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம், நெல்லை டவுனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர்கள் நாராயணன், முகம்மது அனிபா, ஆலோசகர் சம்சுதீன், துணை செயலாளர்கள் செய்யது அலி, ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துைண செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். துணை தலைவர் கான்முகம்மது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் நெல்லை டவுன்- சேரன்மாதேவி சாலையில் காட்சி மண்டபம் அருகில் புதிய பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். டவுன் தெற்கு ரதவீதியில் சேதமடைந்த கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். டவுன் போஸ் மார்க்கெட்டில் பணிகளை விரைந்து நிறைவேற்றி வணிகர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க ஆண்டு விழா நடந்தது. விழாவில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, தேசிய நல்லாசிரியர் விருதுபெற்றவரும், இந்து தொடக்கப்பள்ளி செயலாளருமான செல்லப்பா, வக்கீல் செல்வகணபதி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், இணை செயலாளர் நயன்சிங், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட துணைத்தலைவர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு வேட்டி, சேலை, நிதி உதவி, மாணவர்கள் மற்றும் நலிந்த சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.