தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய இணைஅமைச்சரை பதவியில் இருந்து நீக்கக்கோரி தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். இதில் சக்திவேல், அப்பாசாமி, பழனிச்சாமி, ஜீவானந்தம், முருகேசன், வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியதை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தியும், கோரிக்கை அட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.