கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கு டிராக்டர் பேரணி; ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது


கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கு டிராக்டர் பேரணி; ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கு ஜான் பாண்டியன் தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

தென்காசி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கு ஜான் பாண்டியன் தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

டிராக்டர் பேரணி

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கு டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார்.

தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை குளிர் பதன கிடங்கும், சங்கரன்கோவிலில் பூச்செண்டு தொழிற்சாலையும் அமைக்க வேண்டும். குறுவை பயிர் காப்பீட்டு திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கனிம வள கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை பயிர் செய்து வந்த விவசாயிகளுக்கு பயிர் செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

கலெக்டரிடம் மனு

முடிவில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜான் பாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், அமுத முரளி, சண்முக சுதாகர், அருண் பிரின்ஸ், தலைமை நிலைய செயலாளர் சேகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

முன்னதாக இந்த பேரணிக்கு கடையநல்லூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே மங்களபுரம் இணைப்பு சாலையில் குவிந்தனர். இதனால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியில் இருந்து பேரணி புறப்பட்டது. இதையொட்டி அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story